பெங்களூரு: கர்நாடகாவில், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான, பா.ஜ., அரசு நிறைவேற்றியுள்ள, பசுவதை தடை சட்டத்துக்கு, ஒப்புதல் அளிக்க மறுத்து, கவர்னர் பரத்வாஜ் முட்டுக் கட்டை போடுவதால், அந்த சட்டம் அமலுக்கு வருவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்திய பண்பாடு, கலாச்சாரத்தில் பசுக்கள் மிக சிறப்பான இடத்தை பெற்றுள்ளன. விவசாய நாடான இந்தியாவில், பசுக்களை பட்டினி போட்டு விட்டு, எந்த விவசாயியும் சாப்பிட மாட்டான். ஆனால், இன்று, பசு வம்சமே அழிந்து விடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், தொடர்ந்து நடக்கும் பசுவதையே, இதற்கு காரணம்.கடந்த சில நாட்களுக்கு முன், கர்நாடக மாநிலம் பெல்காமில் நடந்த, சட்டசபை கூட்டத் தொடரில், பசுவதை தடுப்பு மற்றும் பாதுகாப்பு மசோதாவுக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டது. அப்போது, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர், சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதன்பின், இந்த இரு கட்சியினரும், கவர்னர் பரத்வாஜை சந்தித்து, "பசுவதை தடை சட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது' என, வலியுறுத்தி மனு அளித்தனர்.அப்போது பேசிய கவர்னர், "பசுவதை தடை சட்டத்துக்கு, தேசிய அளவில் எதிர்ப்பின்றி, ஒரு மித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே, அதை அமல்படுத்த முடியும். எனவே, யாரும் பயப்பட வேண்டாம்' என, அவர்களுக்கு தைரியம் கொடுத்தார்.
இந்த விவகாரத்தால், கர்நாடக அரசு நிறைவேற்றியுள்ள, பசுவதை தடை சட்டத்திற்கு, அவர் ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறார். அதனால், அந்தச் சட்டம் அமலுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ., தலைவர்களும், இந்த விஷயத்தில், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல், தவித்து வருகின்றனர்.ஏற்கனவே ஒரு முறை, பசுவதை தடை சட்டத்தை, கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றி, கவர்னர் ஒப்புதலுக்காக, பா.ஜ., அரசு அனுப்பியது. ஆனால், அவரோ, சில காரணங்களைக் கூறி, அதை திருப்பி அனுப்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Article: